Wednesday, September 7, 2011

இந்தியாவில் மரண தண்டனை தேவையா...?


சமீப காலத்தில் இந்திய ஊடங்களில் எழுந்த ஒரு கேள்வி நாட்டின் சட்டத்தில் மரண தண்டனை தொடரப்பட வேண்டுமா என்பது. எனது பார்வையில் இந்த கேள்விக்கான விடைகளை பதிவு செய்ய விரும்புகிறேன்.


மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் முக்கியமான வாதம் deterrence. அதாவது மரண தண்டனை என்பது அந்த குற்றவாளி தண்டிக்கபடுவதையும் தாண்டி சமூகத்திற்கு ஒரு செய்தியை அழுத்தமாக சொல்லவே பயன்படுத்தப்படுகிறது. இதைப்போல் குற்றங்கள் செய்தால் நாளை உங்களுக்கும் இந்த தண்டனைதான் என்ற பயம் தடவிய செய்திதான் அது. குற்றம் செய்ய எண்ணுபவர்கள் மரண தண்டனைக்கு பயந்து குற்றம் செய்வதை தவிர்ப்பார்கள் என்பதுதான் இதன் அடிப்படை. இது போன்ற உயிர்கொல்லி வழக்கங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட அல்லது வெறும் பயங்கரவாதிகள் மட்டுமே வசிக்கும் தேசத்திற்கு வேண்டுமானால் ஏற்ப்புடையாதாக இருக்குமே ஒழிய இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருந்தாது என்பது என் நிலைப்பாடு.
உலகத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் மரண தண்டனையை விலக்கிவிட்ட காலகட்டத்தில் இந்தியாவில் இது நீடிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது


முதலாவதாக, இந்தியாவில் கொடூரமான குற்றங்களும் குற்றவாளிகளும் குறைந்துவிட்டதாக நான் கருதவில்லைஅதே சமயத்தில் மரண தண்டனையால் மட்டுமே இந்த குற்றங்களை குறைத்துவிட முடியும் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. உதாரணமாக இணைய தளத்தில் இது சம்பந்தமாக ஆதாரங்கள் தேட தலைப்பட்டால் மரண தண்டனை ஒரு சமூகத்தில் குற்றங்கள் குறைவதற்கு தவுவதில்லை என்ற கருத்திற்கே பெரும்பான்மையான சான்றுகள் சிக்குகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கனடா போன்ற நாடுகள் பல சமூக ஆய்வுகள் நடத்தி, அதில் மரண தண்டனைக்கும் தங்கள் நாட்டில் குற்றங்கள் குறைவதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று தீர்மானமாக தெரிந்த பின்னரே மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்கி இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இது போன்ற அறிவியல் ரீதியான சமூக ஆய்வுகள் ஏதும் நடத்தப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. இது போன்ற எந்த சமூக ஆய்வுகளும் மேற்கொள்ளாத பட்சத்தில் மரண தண்டனை வெறும் உள்ளுணர்வின் அடிப்படையிலும் யூகத்தின் அடிப்ப்டையிலும் ஏன் தொடரப்பட வேண்டும் என்பதே என் பிரதான கேள்வி.


என்னை பொருத்தவரை குற்றவாளிகள் இரண்டு வகை. உணர்ச்சி வசப்பட்டு தன்னிலை இழந்த நிலையில் குற்றம் இழைப்பவர்கள் முதல் வகை. தற்காப்புக்காக மற்றும் கோபத்தில் நடக்கும் கொடூரங்கள் புரிபவர்கள் இதில் அடங்குவார்கள். இரண்டாவது வகை குற்றவாளிகள் திட்டமிட்டு குற்றம் புரிபவர்கள். சுய ஆதாயத்திற்காகவும், கொண்ட கருத்திற்காகவும் குற்றங்கள் செய்பவர்கள் இதில் வருவார்கள். இவர்கள் தங்கள் செய்யும் குற்றத்தின் பின்விளைவுகளை அறிந்தே செய்கிறார்கள். எதற்கும் தயார் என்ற மன நிலையில் செயல்படும் இந்த வகை குற்றவாளிகளை மரண தண்டனை பயத்தால் குற்றம் செய்வதிலிருந்து தவிர்க்க இயலும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் மரண தண்டனை இருப்பதால் சமூகத்தில் எதிர்வினையாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை என்ற மனோபாவம் சமூகத்தில் இன்னும் கொடுமைகளை நடைபெற தூண்டும் என்றே எனக்கு படுகிறது. மாறாக மரண தண்டனையை ஒழித்து சக மனிதனின் உயிரை மதிக்கும் சமூகம் என்ற நிலையை உருவாக்கினால் கொடுமையான குற்றங்கள் குறைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன்.


அடுத்ததாக, தன் உயிரையே மாய்த்துக்கொள்ள உரிமையில்லாத போது சக மனிதனின் உயிரை எடுக்க உரிமை இருக்கிறதா என்ற கேள்வி மரண தண்டனைக்கு எதிராக எழுகிறது. இந்த இடத்தில் மரண தண்டனை குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. மன உளைச்சலுக்கும், காயத்திற்கும் ஆளான இவர்களுக்கு குற்றவாளியை மன்னிக்கும் மனப்பான்மை இருக்குமா என்பதை கூற இயலாது. மரண தண்டனைக்கு மாற்றாக ஆயுட்கால சிறை தண்டனை செயல்படுத்தபடும்போது  அதன் வீரியத்தை பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது. வாழ்நாள் முழுவதும் தான் இழைத்த குற்றத்தை நினைத்து அந்த குற்றவாளி தனியே வேதனை படுவதைவிட என்ன தண்டனை இந்த சமூகம் வழங்கிவிட முடியும் என்பதை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதல் அடையலாம். இது குற்றவாளிகளை வக்காளத்து வாங்கும் முயற்சியல்ல. சக மனிதர்களின் உயிர்களை மதிப்பதன் மூலம் பிற்காலத்தில் சமுதாயத்தில் குற்றங்களை குறைப்பதற்கான ஒரு முயற்சியே.


மற்றபடி அரசியல் காரணங்களுக்காகவும், அரசு இயந்திரத்தின் குளருபடிகளாலும் நிரபராதிகள் தண்டிக்கப்பட சூழ்நிலைகள் அனுமதிப்பதால்இந்த ஆயுட்கால சிறை தண்டனை என்ற மாற்று நிரபராதிகளை மீட்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது


கடைசியாக, மரண தண்டனை நீக்கப்படும் அளவிற்கு இந்திய சமூகம் நல்லொழுக்க நிலையை இன்னும் அடையவில்லை என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. ற் பண்புகளிலும், மனித நேயத்திலும் மரண தண்டனை வழக்கத்தில் இல்லாத எந்த நாட்டு சமூகத்தைவிட நாம் தாழ்ந்துவிடவில்லை என்றே கருதுகிறேன். அன்பிலும், அறத்திலும், பக்தியிலும், முக்தியிலும் பல்லாயிர கணக்கான ஆண்டுகள் தழைத்து வளர்ந்த சமுதாயம் இது. சில பல நச்சு பாம்புகள்  அவ்வப்போது தோன்றி கொடூரங்கள் செய்யத்தான் செய்கின்றன. ஆனால் மரண தண்டனை என்ற பயத்தினால் மட்டுமே ந்த நிலையை மாற்றிவிட முடியும் என்று நான் நம்பவில்லை. மாறாக மனித நேயத்தை வளர்ப்பதன் மூலம் சமூகத்தில் குற்றங்களை குறைக்க முடியும் என்று ஆழமாக நம்புகிறேன்.


No comments:

Post a Comment